யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பெண் தாதி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை உடைத்து 8500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த இளைஞன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் தாதி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்குள் சென்று திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த 8500 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனை அங்கிருந்த பொதுமக்கள் அழைத்தபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். எனினும் துரத்திச் சென்ற பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்த நிலையில் அவரிடமிருந்து திருடப்பட்ட 8500 ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

பின்னர் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

Von Admin