ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றே அழைப்பர். ஏன்? ஆடி என்பதே ஒரு தேவமங்கையின் பெயர். அவளுக்கு ஏற்பட்ட சாபத்தால் வேப்பமரமாகி, அதே சாபத்தின் மூலம் அம்பிகைக்கு உரிய விருக்ஷமானாள். அதனால் „வேப்பமரம்‘ மிகவும் புனிதமானது என்கிறது புராணம். 

ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். அந்த அம்பிகைக்கு விழா எடுப்பதன் மூலம், அம்பிகையின் அருளுடன் வளமான வாழவே, அம்மன் கோயில்களில் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. „ஆடிப் பட்டம் தேடி விதை‘ என்பது பழமொழி. ஆனி – ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். 

அதனால் அப்பொழுது விவசாய வேலைகள் துவங்குவதால் விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.  இம்மாதத்தில்தான் தன்னிரு திருக்கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற கலப்பையையும், உலக்கையையும் கொண்டு விளங்கும் அன்னை வாராகிக்கு உரிய ஆஷாட நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. 

பண்டைய காலத்தில் பஞ்சபூதங்களை வணங்கி வந்தபோது, மழைக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்ட தெய்வமே மாரியம்மன். பருவ கால மாறுதலால் ஏற்படும் வெப்ப சலன மாறுபாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய அம்மை நோயை தீர்ப்பவளாக மாரியம்மனை வணங்குவர். 

அதனால் அவளுக்கு உகந்த கூழ் காய்ச்சி, அம்பிகையின் பக்தர்களுக்கு வழங்குவர். இது மிக்க மருத்துவ குணம் மிக்கது. இதை „ஆடிக்கஞ்சி‘ என்றும் அழைப்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் – இவற்றை இடித்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, காய்ச்சிய கஞ்சியில் இதனை சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட, அதன் சாரம் கஞ்சியில் இறங்கும். 

பின்னர் மருத்துவ குணமிக்க இக்கஞ்சியை எல்லோருக்கும் கொடுப்பர். இதையும் படியுங்கள்: வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா ஆடி மாதத்தில் வரும் பூரத்தன்று பூமாதேவியின் அம்சமாக அவதரித்தாள் ஆண்டாள். கண்ணனையே காதலித்து ஸ்ரீரங்கத்தில் அவர் திருக்கரங்களைப் பற்றி திருமாலுடன் இரண்டறக் கலந்தவள். அன்றைய தினத்தில் ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புதூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் ஆடிப்பூர விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

இதேபோல் சிவன் கோயில்களில் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். அன்று அன்னையை விரதமிருந்து வழிபட்டால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் என்பர்.

Von Admin