யாழ்ப்பாணத்தில் „ரிக் டொக்“ எனப்படும் சமுக வலைத்தளம் மற்றும் இணையத்தள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனவே, பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி எதிர்கால சந்ததிகள் மரணிக்கும் நிலை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் „ரிக் டொக்“ எனப்படும் சமுக வலைத்தளம் மற்றும் இணையத்தள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி , அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிக் டொக்கிற்கு அடிமையாகி அதன் மூலம் காதல் வயப்படுதல் , அதிக நேரம் ரிக்டொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

97 வீதமான மாணவர்கள் சொந்தமாக கையடக்க தொலைபேசிகளை வைத்திருப்பதனால் அவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகளுக்கு மாணவர்கள் அடிமையாவதால், நீரழிவு, உயர் குருதி அழுத்தம், கொழுப்புச் சத்து அதிகரிப்பு, நோய் எதிர்ப்புத் தன்மை குறைவடைதல், என்புத்தொகுதி சார் நோய்கள் என்பவற்றுக்கு ஆளாகுவதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே பிள்ளைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பும் , கண்டிப்பும் பிள்ளைகளின் உடல் – உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என குழந்தை மருத்துவ நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை இளைஞர் சமுதாயத்தை அழித்து, வளர்ந்து வருவதனால் அதனைத் தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என யாழ். மறை மாவட்ட குழு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரியுள்ளார்.

எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இருப்பதால், அனைவருக்கும் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Von Admin