• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வேம்படியில் மாடியிலிருந்து வீழ்ந்து இளைஞன் பலி

Okt 14, 2022

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த மிராஜ் என அழைக்கப்படும் 31 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அருகில் உள்ள விருந்தினர் விடுதி பணியாளர்கள் 10 பேரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதிதாக கட்டப்பட்டு வரும் குறித்த கட்டடத்தில் வேலை செய்யும் குழு ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு அருகில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய பின்னர் மது போதையில் விடுதியில் குழப்பத்தினை ஏற்படுத்தி , விடுதி பணியாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி தாம் வேலை செய்யும் புதிய கட்டடத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாண பொலிஸார் சந்தேகத்தின் பேரில் விடுதி பணியாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed