யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் தேவமயில் முருகவேள் (வயது 65) எனும் முதியவரே படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஊறணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை, நாவலடி , ஊரிக்காடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், வாள் மற்றும் கோடாரியுடன் புகுந்த இருவர் வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான முதியவரின் அவல குரலை கேட்டு , அயலவர்கள் ஒன்று கூடிய வேளை தாக்குதலாளிகள் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய இருவரையும் அயலவர்கள் விரட்டிய போது , ஒருவர் அயலவர்களினால் மடக்கி பிடிக்கப்பட்டார். இருந்த போதிலும் மற்றையவர் தப்பியோடியுள்ளார்.

அயலவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டவர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.