மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மணல்பிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் குடும்பத்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை (23) பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

40 ஆம் கிராமம், வம்மியடியூற்று திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த சண்முகம் வினோராஜ் வயது 31 என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

சும்பவ தினத்தன்று தனது தாயாரின் வீடான பண்டாரியவெளி பிரதேசத்தில் இருந்து தனது வீட்டுக்கு தனது உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் படுகாயம் அடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் கடந்த மாதம் திருமணமானவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin