ஜேர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் பல இலட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்த செல்வகுமார்பார்த்திபன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

பார்த்திபனுக்கு கடந்த வாரம் ஜேர்மனியில் இருந்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பல மடங்கு இலாபம் கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்துள்ளது.

அதை நம்பிய பார்த்திபன், குறுந்தகவலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தொடர்பு கொண்டபோது, லிசா பிஞ்ச் என்ற ஜேர்மனிய பெண் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கிடைக்கும் இலாபங்களை பற்றி எடுத்துரைத்துள்ளார்.

இதையடுத்து, பார்த்திபன் 18 இலட்சத்தை கிரிப்டோ கரன்சி மதிப்பில் மாற்றி அந்தப் பெண் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பார்த்திபன் அந்த செயலியை பரிசோதித்தபோது, செயலி முடக்கப்பட்டு உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பார்த்திபன் இதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையிடம் முறைப்பாடு செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வாறான குறுந்தகவல்களை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என காவல்துறையினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.