• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு திடீர் நெருக்கடி

Okt 31, 2022

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதிகள் எதிர்நோக்கும் இடநெருக்கடி பிரச்சினை ரிஷி சுனக் அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

டோவரில் குடியேறிகள் தங்கியிருந்த மையத்தில் நேற்று நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்கனவே இடநெருக்கடி நிலவும் மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

ஆங்கிலக் கால்வாயை சிறிய படகுகளில் கடந்து பிரித்தானியாவுக்குள் நேற்றும், நேற்று முன்தினமும் மொத்தமாக ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட குடியேறிகள் நுழைந்துள்ள நிலையில் குடியேறிகள் மற்றும் அகதிகளை தங்கவைப்பதில் பெரும் நெருக்கடிகள் எழுந்துள்ளன.

இதனையடுத்து இந்த விடயத்தில உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் புதிய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்.

டோவரில் நேற்று நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுதாக்குதல்களில் இரண்டு பேர் காயமடைந்திருந்த நிலையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கருதப்படும் சந்தேக நபர் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

இந்தத் தாக்குதலையடுத்து அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 700 பேர் ஏற்கனவே 4000 பேர் தங்கவைக்கப்பட்டு இடநெருக்கடியை எதிர்நோக்கும் மான்ஸ்ரன் மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்து புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

புதிய இடநெருக்கடி நிலைமைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அழுத்தத்தில் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் உள்ளார்.

பிரித்தானியாவை நோக்கிய குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், ஆட்கடத்தல்காரர்களைத் தடுப்பதற்கு முயற்சிப்பதாக ஆளும் தரப்பு அரசாங்கம் கூறினாலும் இந்தப் பிரச்சினை தற்போது கட்டுப்பாட்டை மீறிச்சென்றுள்ளதான கண்டனங்கள் வலுத்துள்ளமை ரிஷி சுனக்கின் அரசாங்கத்துக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed