பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண் விபத்துக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.ஜூலி நிக்கோலா பேர்கர் என்ற 54 வயதுடைய பிரித்தானிய பெண்ணே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

கடந்த  மாதம் 24ஆம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர் 9 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு வந்துள்ளார். அவருடன் சென்ற அனைவரும் பிரித்தானிய நாட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய சுற்றுலாப் பயணியான குறித்த பெண், துவிச்சக்கர வண்டியில் நாட்டைச் சுற்றிக் கொண்டிருந்த போது, ​​எல்ல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளுடன் இணைந்து இலங்கையின் அழகை ரசித்தவாறு கடந்த 24ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து நாடு முழுவதும் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகளும் அவருடன் சைக்கிளிலில் பயணித்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. 09 சுற்றுலாப் பயணிகளும் துவிச்சக்கர வண்டிகளில் ஏறி கண்டியிலிருந்து முதல் நாள் பயணத்தை நிறைவு செய்தனர்.

இரண்டாம் நாள் நுவரெலியாவுக்குப் பயணித்து அங்கே இரவைக் கழித்துள்ளனர். 28ஆம் திகதி காலை நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர். இவர்கள் எல்ல ஊடாக உள்ள வீதிகள் ஊடாக பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லவாய வீதியின் கரடகொல்ல பிரதேசத்தில் செங்குத்தான இடத்தை கடந்த போது குறித்த பெண் தனது துவிச்சக்கர வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கரடகொல்ல விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலத்தை பிரித்தானியாவுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Von Admin