உலக செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான டுவிட்டரை கையகப்படுத்திய பின்னர் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை முன்னெடுத்தார்.

அதே பாணியில் தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமைக்குள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து மெட்டா உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, மெட்டாவெர்ஸில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் லாபம் ஈட்டித்தர இன்னும் ஒரு தசாப்தம் கூட ஆகலாம். இதனால் சில புதிய வேலைவாய்ப்புகளை நிறுத்திவைப்பது, புதிய திட்டங்களை ஊக்குவிக்காமல் இருப்பது போன்ற செலவினக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆள்பலத்தைப் பொருத்தவரை மெட்டா இப்போது இருக்கும் அளவிலேயே இருக்கலாம், அல்லது சற்றே குறையலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே பேஸ்புக் ஆட்குறைப்பு நடவடிக்கையில் உடன் ஈடுபட இருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன