சுவிஸர்லாந்தில் இருந்து புதிய விமான சேவையின் விமானம் ஒன்று சேவைகளை ஆரம்பித்துள்ளதுடன்   முதலாவது பயணமாக அந்த விமான சேவையின் விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சுவிஸர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் இந்த விமான சேவை நிறுவனம் நேரடியாக விமான போக்குவரத்தை நடத்தவுள்ளது.

ஈடெல்வைஸ்  விமான சேவை நிறுவனத்தின் W.K.068 என்ற விமானம் இன்று மதியம் 12.20க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த விமானத்தில் 125 பயணிகளும் 15 விமான பணியாளர்களும்  இலங்கை வந்துள்ளனர்.

இவர்களை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

விமான நிலையத்தில், விமானத்தில் வந்த பயணிகளுக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. ஈடெல்வைஸ் விமான சேவை வாரத்தில் ஒருமுறை கட்டுநாயக்கவுக்கும் சூரிச்சுக்கும் இடையில் நேரடி விமான சேவையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.