சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது. 

ஓமானில் இந்நாட்டு பெண்களை பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதேவேளை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தராதரம் பாராது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று (19.11.2022) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயத்தில் தவறு செய்தவர் எவராக இருந்தாலும் நாங்கள் தராதரம் பார்க்க மாட்டோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். சுற்றுலா விசாவில் பயணம் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தடை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (19.11.2022) “ஓமானில் மனித கடத்தலில் சிக்கியவர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேட்ட கேள்விக்கு” பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதியுடன் அல்ல.

அவர்கள் துபாய் அல்லது வேறு நாட்டிற்குச் சென்று அங்கிருந்து ஓமனுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். தற்போது, ​​நாங்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெண்களை, வீட்டு மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பப்படும் நடவடிக்கை கடந்த 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

Von Admin