கனடாவில் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

இந்த மாத இறுதி முதல் இந்த தடை நாடு தழுவிய ரீதியில் அமல்படுத்தப்பட உள்ளது.

ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய அல்லது சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் வகைகள் உற்பத்தி செய்யப்படுவது மற்றும் இறக்குமதி செய்யப்படுவது என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

இந்த வகை பிளாஸ்டிக் உற்பத்திகள் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட உள்ளது.

முன்னதாக இந்த தடை உத்தரவு 2021 ஆம் ஆண்டிலேயே அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது எனினும் சில காரணிகளினால் தடையுத்தரவு அமுல்படுத்துவதற்கு காலம் தாழ்த்தப்பட்டது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவுகளை பூச்சியமாக பேணும் அரசாங்கத்தின் இலக்குகளில் ஓர் கட்டமாக இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் உற்பத்திகள் பச்சை வீட்டு வாயு வெளியீட்டை அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு பாரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு பல்வேறு வழிகளில் பல்வேறு கட்டங்களாக தடை விதிக்கப்பட்டு வருகின்றது.

பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கரண்டிகள், முள்கரண்டி, பிளாஸ்டிக் கத்திகள், பெட்டிகள், தட்டுகள், கோப்பைகள், ஸ்ரோக்கள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Von Admin