வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.4.6 கோடியை ஆடம்பரமாக செலவிட்ட ஆஸ்திரேலிய இளைஞருக்கு 18 மாதம் சிறை தண்டனை வித்தி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோரே மற்றும் தாரா தோர்ன் தம்பதியினர்  சிட்னி கடற்கரையையொட்டி வீடு வாங்க நினைத்தனர்.

இந்நிலையில், புரோக்கர் ஆதம் மாக்ரோ மூலம் நல்ல வீடு ஒன்று விலைக்கு வந்தது.

வீட்டுக்கான தொகை ரூ.4.6 கோடியை அனுப்புமாறு புரோக்கரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்தத் தம்பதியினருக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி ரூ.4.6 கோடியை அந்தத் தம்பதியினர் அனுப்பியுள்ளனர்.

அதன்பின் புரோக்கரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து காவல் துறையிடம் தம்பதியினர் புகார் அளித்தனர்.

விசாரணையில் அப்துல் காதியா என்ற 24 வயது இளைஞர், புரோக்கர் ஆதம் மாக்ரோவின் மின்னஞ்சலை ஹேக் செய்து, அந்த மின்னஞ்சல் வழியாக கோரே மற்றும் தாரா தோர்ன் தம்பதியினரிடம் இருந்து பணம் பெற்றுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அப்துல் காதியா மறுத்துள்ளார். “என் வங்கிக் கணக்கில் ரூ.4.6 கோடி வரவாகி இருந்தது. அந்தப் பணத்தைக் கொண்டு என் விருப்பத்துக்குரியவருக்கு தங்கம் வாங்க விரும்பினேன்.

அந்தப் பணம் தற்செயலாக என்னுடைய கணக்கில் வரவாகி இருந்தது. நான் யாரையும் மோசடி செய்யவில்லை” என்று அப்துல் காதியா காவல் துறையிடம் தெரிவித்தார்.

அதேவேளை புரோக்கரின் மின்னஞ்சலை அப்துல் காதியாதான் ஹேக் செய்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை. எனினும், தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணம் பற்றி வங்கியிடம் தகவல் தெரிவிக்காமல் செலவழித்தது குற்றம் என்று கூறிய ஆஸ்திரேலிய நீதிமன்றம், இந்த குற்றத்தில் ஈடுபட்டதற்காக அப்துல் காதியாவுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.