இணையத்தின் ஊடாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த கும்பலில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையில் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலினால் பாதிக்கப்பட்ட 32 பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் வங்கி மேலாளர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் பலர் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக இணையத்தில் விளம்பரங்கள் பதிவிட்டிருக்கும் நபர்களை அழைத்து அந்த பொருட்களை ஓரிரு நாட்களுக்குள் கொள்வனவு செய்வதாகவும் அதனை யாருக்கும் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் இந்த கும்பல் கூறுகின்றது.
அதற்கமைய, அந்த பொருட்களுக்கு முற்பணம் செலுத்துவதாகவும் அதற்கான வங்கி இலக்கத்தை வழங்குமாறும் இந்த குழுவினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
மேலும் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் இலக்கம் ஒன்று கையடக்க தொலைபேசிக்கு வருவதாகவும் அதனை வழங்குமாறும் இந்த குழுவினரால் கேட்கப்படுகின்றது. அதன் பின்னர் வங்கிகளில் உள்ள பணத்தை நுட்பமாக திருடும் நடவடிக்கையில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் வீடுகளை சோதனை செய்ததில் கண்டி மற்றும் கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான முப்பது வயதுக்குட்பட்ட கல்வியறிவுள்ள, கணினி தெரிந்தவர்களே மோசடி செய்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.