இயற்கையின் சீற்றத்தால் அழிவில் இருந்து மீள முயற்சிக்கும் நாடொன்று, நிதியுதவிக்காக 1.05 லட்சம் டொலருக்கு குடியுரிமையை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவுரு தீவு (Nauru), வெறும் 8 சதுர மைல்கள் பரப்பளவுடன், உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.
தற்போது, உலக வெப்பமயமாதலால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு, கரையொதுங்குதல் மற்றும் சூறாவளி தாக்கங்கள் போன்ற ஆபத்துகளுக்கு நவுரு தீவு நேரடியாக ஆளாகி வருகிறது.
இதனால், நவுரு அரசு கடவுச்சீட்டு விற்பனை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ஒரு நபர் நவுரு குடியுரிமை பெறுவதற்கு $105,000 (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.3,10 கோடி) செலவாகும்.
இதன் மூலம், நாட்டின் 12,500 மக்கள் தொகையின் 90 சதவீதம் பேரை உயரமான பகுதிக்கு மாற்றி புதிய குடியிருப்புகளை உருவாக்குவதற்கான நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பல நாடுகள் Golden Passport திட்டங்களை அறிவித்திருக்கின்றன. ஆனால், இதை பலர் தவறாக பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவுருவின் முதன்மை வருவாய்
1990-களில் நவுருவே இப்படியான திட்டம் மேற்கொண்டபோது, சில சட்டவிரோத மற்றும் தீவிரவாத சம்பவங்களில் நவுரு தீவின் கடவுச்சீட்டு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நவுருவின் முதன்மை வருவாய் ஆதாரம் கனிமம், ஆனால் 1900 முதல் தொடர்ந்த சுரங்க உழைப்பால், தீவின் 80சதவீத பகுதி வாழ முடியாத நிலையாக மாறியது.
பிறகு, அவுஸ்திரேலியாவின் அகதிகள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது, ஆனால் இத்திட்டமும் சர்ச்சைகளால் குறைக்கப்பட்டது.
தற்போது, ஆழ்கடல் சுரங்கோடை திட்டம் மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கடவுச்சீட்டு விற்பனை புதிய வருவாய் மூலமாக பார்க்கப்படுகிறது.
நவுரு அரசு முதல் ஆண்டு $5.6 மில்லியன் மற்றும் ஆண்டுதோறும் $42 மில்லியன் வரை வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறது.
ஆனால், இது உண்மையில் மக்கள் நலனுக்குப் பயன்படுத்தப்படுமா அல்லது அரசின் அதிகாரம்தான் அதிகரிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நவுருவின் இந்த முயற்சி, குடியுரிமை விற்பனை மூலம் ஒரு நாடு தனது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் புதிய வழியாக உலகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கலாம்.