ஆஸ்திரேலியாவில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக விசாவுடன் வாழ்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு வழியேற்படுத்தப்படவேண்டுமென பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் விரும்புவதாக ஆய்வு முடிவொன்று கூறுகின்றது.

மனித உரிமைகள் சட்ட மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்களில் 78 சதவீதமானோர், தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் இங்கு நிரந்தரமாக குடியமர்த்தப்பட வேண்டுமென கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலையற்ற வாழ்க்கை வாழும் அவர்களுக்கு, நிலையான எதிர்காலம் அமையவேண்டுமென கருத்து தெரிவித்த 78 வீதமானோரும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை தற்காலிக விசாவுடன் இங்கிருப்பவர்கள், நாட்டின் சில துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாக அமைவர் என, கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 58 வீதமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியர்கள் பணிபுரியத் தயங்கும் பல துறைகளில், இவர்கள் வேலைசெய்ய முன்வருவர் எனவும் 33 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்லாமல் பல்கலாச்சார நாடான ஆஸ்திரேலியா, இவர்களால் மேலும் மெருகூட்டப்படும் எனவும், என்னவிதமான விசாவில் இருந்தாலும் தமக்கான நிலையான எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படவேண்டுமெனவும், குறித்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்

இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள மனித உரிமை சட்ட மையத்தின் David Burke, தமது வாழ்க்கையைத் தாம் விரும்பியபடி திட்டமிட்டமிடுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால் ஆஸ்திரேலிய அரசின் விசா முறைமை பல குடும்பங்களை ஒன்றிணையமுடியாதவாறு பிரித்துவைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்காலிக விசாவுடன் இங்கு வாழ்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, ஆஸ்திரேலியர்கள் தெளிவாக உணர்ந்துள்ளமையை இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துவதாகவும் David Burke மேலும் தெரிவித்தார்.