வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாயின் துணையுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்துவந்தவர்கள் உறவினர் ஒருவரின் பூப்புனித நிராட்டு விழாவிற்கு காலை சென்றிருந்தனர். அயல் வீட்டாரும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தமையால் கடந்த சில நாட்களாக வீட்டில் இருக்கவில்லை.

இதனையறிந்த திருடர்பகள் பட்டப்பகலில் மதில் ஊடாக குறித்த வீட்டிற்குள் நுழைந்து, படி மூலம் வீட்டின் மேற் கூரைப்பகுதிக்கு சென்று சமையலறை ஓட்டை கழற்றி அதனூடாக உட் கூரைப் பகுதியை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள்.

நுழைந்தவர்கள் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் நகை பணம் என்பவற்றை சல்லடை போட்டு தேடியுள்ளதுடன், வீட்டில் இருந்த நான்கு பவுண் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு கதவினை திறந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்ற வீட்டார் வீட்டை திறந்த போது அங்கு பொருட்கள் பரவிக் கிடந்ததுடன், சமையலறை கூரை உடைக்கப்பட்டும், கதவு திறக்கப்பட்டும் இருந்ததை அவதானித்துடன் நகை மற்றும் பணம் திருடப்பட்டு இருந்தமையையும் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தெரிவித்தையடுத்து அவர்கள் ஊடாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.  

சம்பவ இடத்திற்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.ஏ.ஏ.எஸ்.ஜயக்கொடி தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் வருகை மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர். 

Von Admin