முச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் இன்று முதல் வழங்கப்படவுள்ளது.

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெறுவதற்கு மேல் மாகாணத்தில் பதிவு செய்வது கட்டாயம் என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அமைப்பின் அழைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக முச்சக்கர வண்டிகளுக்கு ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, முச்சக்கரவண்டி ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிகமாக 5 லீற்றர் வழங்குவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த முதலாம் திகதி முதல் மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முச்சக்கரவண்டிகளின் பதிவு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரை சுமார் 9,000 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலதிக எரிபொருள் கோட்டாவான 05 லீற்றரைப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கு இன்னும் அவகாசம் உள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வேலைத்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Von Admin