• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அழிவை தந்த ‘ஆழிப்பேரலை’ பறிப்போன 35,000 உயிர்கள்!  18 வருடம்!

Dez 26, 2022

இலங்கையில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை.

2004 டிச 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில்
நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா,

இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதி ஆழிப்பேரலையால் ஆட்கொள்ளபட்டது.

அதன் விளைவு இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதில் இந்தோனேசியாவில் ஒரு இலட்சத்து 84 ஆயிரம் உயிர்களும் இலங்கையில் 35 ஆயிரத்து 322 பேரும் பலியானதாக அன்றைய ஆரம்ப அறிக்கை கூறியது.

சுனாமியின் தாக்கத்தால் அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கை. இங்கு சுமார் 35,322 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, சுமார் 516,150 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் சுமார் 119,562 கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்தன. வடக்கு-கிழக்கு உள்ளிட்ட கடற்கரையோரப் பிரதேசங்களே அதிகளவான அழிவுகளை சந்தித்தன.

இலங்கையின் கிழக்கு கல்முனைப் பகுதியை முதலில் தாக்கிய சுனாமி அலையினால் பெரியநீலாவணையிலிருந்து பொத்துவில் வரையுள்ள நீண்ட கடற்கரைப் பகுதிகளே பெருமளவு பாதிப்பை கண்டுள்ளன.

திருக்கோவில் தம்பட்டை மற்றும் அக்பர் கிராமம் முழுமையாக அழிந்துள்ளன.

2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இலங்கையின் பாரிய மனித உயிர்சேதம் அம்பாறை மாவட்டத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது.

இங்கு சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக மக்களை கடல் காவுகொண்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக சுமார் 4500 பேர் ஹம்பாந்தோட்டையிலும். சுமார் 3774 பேர் காலியிலும், மட்டக்களப்பில் 2975 பேரும், முல்லைத்தீவில் 2902 பேரும் பலியானதாக ஆரம்ப அறிக்கை கூறியபோதிலும் பின்னர் இவை மாற்றம் ஏற்பட்டது.

அதேசமயம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற புகையிரதம், அதாவது மிகுந்த சனநெரிசல் மிக்க பயணிகள் புகையிரதம் கடலலையின் சீரற்றத்திற்கு இரையானது.

இதில் மிக மகிழ்வுடன் வீடு நோக்கிப் பயணித்தவர்களில் 1700 இற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போனார்கள். இது ஆசியாவின் புகையிரத விபத்துக்களில் முக்கியமானதாகவும் உள்ளது.

இவை அத்துணை பேரழிவும் நடந்தேறி இன்றுடன் 18 வருட கள் ஆகிறது.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், இன்று தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன்பதிராஜா தெரிவித்துள்ளார்

இதன் பிரதான நிகழ்வுகள் காலி, பெரேலிய சுனாமி நினைவுத்தூபி முன்றிலில் இன்று (26) காலை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர், முப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சேதமடைந்த 50 ஆம் இலக்க என்ஜினுடனான தொடருந்து ஒன்றும் வழமைபோல பெரேலியவை சென்றடையும் என்றும், ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குழுவொன்றும் அந்த தொடரூந்தில் வந்திறங்கி, நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed