• Do. Apr 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று தை அமாவாசை; பாவங்கள் நீங்க பிதிர்கடன் செய்யுங்கள்!

Jan 21, 2023

தை அமாவாசையான இன்று நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாள் ஆகும்.

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். நம் முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியம்.

வருடத்தில் வரும் மூன்று முக்கிய அமாவாசைகள்

தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை. இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்கவேண்டிய முக்கியமான நாள் ஆகும்.

தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார்.

இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

சூரியனும் சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இதனைப் புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது.

முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்த பின் வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தைச் சுத்தம் செய்து வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்துக் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும்.

கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்குத் தானமாக வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னோர்களுக்கு பிடித்த படையல் போட்டு வழிபட்டால் அவர் மனத்திருப்தி அடைந்து நல்லாசி புரிவார்கள். தெய்வத்திடம் பெறக்கூடிய ஆசீர்வாதத்தை விட நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசி வாங்குவது தான் நம் குடும்பத்தை நல்லமுறையில் வாழவைக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரிலிருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.

அதைப்போல் கரையிலிருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாகப் பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது.

அமாவாசை என்றால் சிவன் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலுமே சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். தை அமாவாசை நாளில் முருகப்பெருமான் உறையும் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed