• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நெய்வேலி மாணவி தற்கொலை

Apr 7, 2023

கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் உத்தராபதி. இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வில் 399 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருந்தார். இதனையடுத்து மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் தேர்வில் பாஸ் ஆகவில்லை. இதனையடுத்து மாணவியை இந்திரா நகரில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் பெற்றோர்கள் சேர்த்திருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சமீபத்தில் கோச்சிங் சென்டரில் நடைபெற்ற மாதிரி தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களாக இந்த தோல்வி குறித்த மன உளைச்சலில் அவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்.05) கோச்சிங் சென்டர் போவதாக கூறிவிட்டு வந்த மாணவி வடலூர் ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவி நீட் தேர்வு அச்சத்தால்தான் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தடை

இந்த தற்கொலை குறித்து அரசியல் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக உறுதியான சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 27ம் தேதி சேலம் மாவட்டத்தில் நீட் அச்சம் காரணமாக மாணவர் ஒருவர் பயிற்சி மையத்திலேயே தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். ஆக கடந்த 10 நாட்களில் இது இரண்டாவது தற்கொலையாகும். அதேபோல நடப்பாண்டில் நடைபெறும் இரண்டாவது தற்கொலை இது. கடந்த 2017ம் ஆண்டில் நீட் நடைமுறைக்கு வந்த பின்னர், அதை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டு விட்ட நிலையில், 2021 செப்டம்பரில் மீண்டும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

என்எஸ்ஏ எல்லாம் போடுறாங்களே.. ஸ்டிரிக்ட் காட்டிய ஸ்டாலின்.. பதறும் என்எஸ்ஏ எல்லாம் போடுறாங்களே.. ஸ்டிரிக்ட் காட்டிய ஸ்டாலின்.. பதறும் „வதந்தி“ தலைகள்.. பரபர பின்னணி

ஓராண்டு

அதை ஆளுநரே திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022ம் ஆண்டு பிப்ரவரி 8ம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 14 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்று வரையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது.

கிராமப்புற மாணவர்கள்

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை நீட் தேர்வு ஏற்படுத்துகிறது. 12 ஆண்டுகள் படித்த படிப்பை இந்தத் தேர்வு புறக்கணிக்கிறது. மேலும், இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உள்ள நிலையில்,பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பெரிதும் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே.ராஜன் குழு கூறியுள்ளது.

எண்ணிக்கை

அதேபோல நீட் தேர்வுக்கு முன்பாக முன்பாக 2016-17ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 65.17 சதவிகிதமாக இருந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வுக்கு பிறகு 49.91 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேநேரம் 31.83 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற மாணவர்களின் எண்ணிக்கை 50.09 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவ படிப்பு சேர்க்கையும் நீட் தேர்வுக்கு முன் 19.26 சதவீதமாக இருந்து, ஆனால் நீட் தேர்வுக்கு பின் 10.46 சதவீதம் ஆக குறைந்துள்ளது என ஏ.கே.ராஜன் குழு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed