உலக நாடுகள் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து முடிவெடுத்துள்ளதாகவும் ஏறத்தாழ 6 வீதம் முதல் 50 வீதம் வரை எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் எமது நாட்டில் 8 வீதம் மாத்திரமே அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளமை மற்றும் ஏனைய நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி இன்று (20) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “மார்ச் மாதம் 24-25 ஆம் திகதிகளில் 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று வரவிருந்தது. எமக்கு மசகு எண்ணெய் புஜைரா துறைமுகத்திலிருந்தே வருகின்றது. ஆனால் அத்துறைமுகத்திற்கு நேர்ந்த விபத்தை நீங்கள் அறிவீர்கள்.
மேலும் வரவிருந்த 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலும் வராது. மசகு எண்ணெய் கப்பல்கள் கிடைக்காமையினால் தான் எமக்கு பிரச்சினை உருவெடுக்கலாம்.
இதற்கமைய, மார்ச் 5ஆம் திகதி நாம் ஒரு டெண்டர் கோரினோம். அது இந்த 17ஆம் திகதி திறக்கப்பட்டது. டீசல், பெட்ரோல், எண்ணெய், ஜெட் ஏ-1 மற்றும் 2 மசகு எண்ணெய் கப்பல்களுக்காக இந்த டெண்டர் கோரப்பட்டது.
