அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போர் தொடர்பாக நெதன்யாகு முன்வைத்த எதிர்பார்ப்புகளை வான்ஸ் கடுமையாக விமர்சித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் ஆட்சி மாற்றம் மிகவும் எளிதானது என்றும், அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் போருக்கு முன்னதாக நெதன்யாகு, டொனால்ட் ட்ரம்பிடம் உறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கள நிலவரம் அவ்வாறு இல்லையென சுட்டிக்காட்டிய ஜே.டி. வான்ஸ், நெதன்யாகுவின் இந்த கணிப்பை விமர்சித்துள்ளார்.
போரின் சவால்களை மறைத்து, அது எளிதாக முடியும் என்ற பிம்பத்தை நெதன்யாகு உருவாக்கியதாகவும் வான்ஸ் கருதுகிறார்.
இந்த மோதலுக்குப் பின்னர், இஸ்ரேல் திட்டமிட்டு வான்ஸின் அரசியல் பிம்பத்தை பாதிக்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் வான்ஸ் முக்கிய பங்காற்றி வருகிறார். வெளிநாட்டு போர்களில் அமெரிக்கா நீண்டகாலம் ஈடுபடுவதற்கு அவர் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வான்ஸ் முக்கியமான நபராகக் கருதப்படுகிறார் என அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
