• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி

Jan 28, 2022

சுவிட்சர்லாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு உதவித் தொகையை குறைக்க அந்நாடு விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாகவே, ஒரு நாடு தன் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் இரண்டு விடயங்களை எதிர்பார்ப்பதுண்டு. ஒன்று, அவர்களால் நாட்டுக்கு வருவாய் வருமா என்பது. இரண்டு, அவர்களால் தன் நாட்டுக்கு இழப்பு ஏற்படுமா என்பது.

ஆக, இந்த இரண்டு விடயங்களையும் உறுதி செய்வதற்காக நாடுகள் அது குறித்து அவ்வப்போது மீளாய்வு செய்வதுண்டு.

அவ்வகையில், சுவிட்சர்லாந்தும் சில திட்டங்களை தீட்டி வருகிறது.

வெளிநாட்டவர்கள், அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் (பிரித்தானியர்களையும் சேர்த்துத்தான்), தங்கள் தொழிலாளர் சந்தையில் ஒருங்கிணைந்து வாழ்வதை அதிகப்படுத்துதல், மற்றும், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை குறைத்தல் ஆகிய இரண்டு விடயங்கள் குறித்து சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருகிறது.

வெளிநாட்டவர்கள், அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், வேறு வகையில் கூறினால், மூன்றாம் நாட்டுக் குடிமக்கள், சுவிஸ் நாட்டவர்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தவர்களை விட அதிக அளவில் உதவித்தொகைகளை சார்ந்திருக்கும் அபாயம் உள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

அதுபோக, சுவிட்சர்லாந்தில் வேலை தேடுபவர் மட்டுமல்லாது, அவரது முழுக் குடும்பமும் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்வதை உறுதி செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய பெடரல் அதிகாரிகள் விரும்புகிறார்கள்.

முதல் கட்டமாக, வெளிநாட்டவர் ஒருவர் சுவிட்சர்லாந்துக்கு வந்த முதல் சில வருடங்கள் மட்டும் அவருக்கு உதவித்தொகை வழங்கிவிட்டு, வெளிநாட்டவர்கள் அந்த உதவித்தொகையையே நம்பியிருந்துவிடக்கூடாது என்பதற்காக, பின்னர் அந்த உதவித்தொகையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், சுவிட்சர்லாந்துக்கு வரும் வெளிநாட்டவர்கள், குடியமரும் அனுமதி பெறும் முன் அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்கு எவ்வகையில் ஆதரவளிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் அரசு விரும்புகிறது.

மேலும், வெளிநாட்டவர்கள் அதிக அளவில் அரசின் உதவித்தொகையை சார்ந்து வாழும் பட்சத்தில், அவர்களுடைய வாழிட அனுமதியை ரத்து செய்யவும் மாகாணங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த நிலை தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களே சுவிட்சர்லாந்தில் அரசின் உதவித்தொகையை அதிகம் நம்பியிருப்பதாக கூறப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களில் 8.8 சதவிகிதம்பேர் அரசு உதவித்தொகை பெறுவதாகவும், ஆனால், சுவிஸ் நாட்டவர்களில் 2.3 சதவிகிதத்தினரே அரசு உதவித்தொகை பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தாரான வெளிநாட்டவர்கள் 2.8 சதவிகிதத்தினரே அரசு உதவித்தொகை பெறுவதாகவும் தெரியவந்துள்ளதால், சுவிஸ் அரசு, மூன்றாம் நாட்டவர்கள் பெறும் உதவித்தொகையைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed