• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாளின் சித்திரத்தேர் சிறப்புடன்.

Apr 15, 2022

யாழ்.குப்பிழான் மண்ணிற்கு குன்றாது நலம் வழங்கித் திருவருள் பொழிந்து கொண்டிருக்கும் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(15.4.2022) வெகுசிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை-06 மணிக்கு அபிஷேகம், பூசை, தம்ப பூசை என்பன ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை-08 மணிக்கு வசந்தமண்டப் பூசையும், காலை-09 மணிக்குத் திருநடனத்துடன் அலங்கார நாயகியாக கெளரி அம்பாள் உள்வீதியில் எழுந்தருளினாள்.

முற்பகல்-10 மணிக்கு அம்பாள் சித்திரத் தேருக்கு ஆரோகணம் செய்ததைத் தொடர்ந்து சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதும் நிகழ்வும், சிதறு தேங்காய் உடைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-11 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டு இழுக்க சித்திரத் தேரில் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாம் கெளரி அம்பாள் மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதமானது. சித்திரத் தேர் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

சித்திரத் தேர் வீதி பவனி வந்த வேளையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் ஆண் அடியவர்கள் பலரும் பறவைக் காவடிகள், செதில் காவடிகள் ஆடியும், அங்கப் பிரதட்சணை எடுத்தும் பெண் அடியவர்கள் பலரும் அடியளித்தும், பாற் காவடிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

இம்முறை இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் குப்பிழான் கிராமத்து அடியவர்கள், குப்பிழான் கிராமத்திலிருந்து சென்று வேறு கிராமங்களில் வாழ்ந்து வரும் அடியவர்கள், அயற் கிராம அடியவர்களுடன் குப்பிழானிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் அம்பாளின் அடியவர்களும் பல எண்ணிக்கையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேர்த் திருவிழாக் கிரியைகளை புன்னாலைக்கட்டுவன் மண்ணின் கிரியா கலாபமணி சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்புற நிகழ்த்தினர்.

இதேவேளை, கடந்த-07 ஆம் திகதி முற்பகல்-11 மணிக்கு இவ்வாலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சித்திரைப் புத்தாண்டு நன்னாளான நேற்று வியாழக்கிழமை இரவு சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் சித்திரா பெளர்ணமி தினமான நாளை 16 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed